உக்ரைனை விட்டு 6,60,000 பேர் தஞ்சம்- ஐ.நா ..!

ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மத்தியில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறினர்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாள் இன்றும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா உள்ளிட்ட பிற ஆதரவு நாடுகள் தெரிவித்துள்ளன.
உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் இதுவரை 350 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்ட்டுள்ளது. ரஷ்யா மீது இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவும் பிற நாடுகளும் யோசித்து வருகின்றன.
மறுபுறம், உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த தகவலை வெளியுறவு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்தது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், “கார்கிவ் நகரில் இன்று காலை நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவர் நவீன் என்பதும், நவீன் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்து வந்தார். நவீன் கர்நாடகா மாநிலத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.