ஜூலை 10 வரை கல்வி நிலையங்கள் இயங்காது;அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் – அரசு திடீர் அறிவிப்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால்,இலங்கை மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சை அடைந்து வருகின்றனர்.அவ்வப்போது,கடல் வழியாக பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சிலர் கைதும் செய்யப்படுகின்றனர்.இதனால்,இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.
இதனிடையே,இலங்கை அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டங்களுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து,நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.
இந்நிலையில்,இலங்கையில் ஜூலை 10 ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.குறிப்பாக,ஜுலை 10 ஆம் தேதி வரை நகர்ப்புற கல்வி நிலையங்கள்,அத்தியாவசியம் இல்லாத சேவைகள் இயங்காது எனவும் அறிவித்துள்ளது.இந்த தடை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை நிலைமையை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
அதே சமயம்,மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில்,இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியின் தொடக்க நிலையில்தான் உள்ளது எனவும்,இனிதான் மிக மோசமான விஷயங்கள் நிகழப்போகிறது.இதனால்,மக்கள் தினமும் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.