வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 52 பேர் உயிரிழப்பு!
வங்க தேசத்தில் உள்ள ஜூஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் காயமடைந்து உள்ளனர்.
வங்கதேசத்தின் தலைநகராகிய டாக்காவில் உள்ள 6 மாடி கட்டிடம் கொண்ட ஜூஸ் தொழிற்சாலை ஓன்றில் நேற்று மாலை 5 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் அதிகளவிலான இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்டிருந்ததால் அந்த தீ வேகமாக அருகிலிருந்த கட்டிடங்களுக்கு பரவியுள்ளது.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 18 வாகனங்களில் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ அதிகளவில் பரவியதால் தொழிலாளர்கள் பலர் மேலிருந்து கீழே குதித்துள்ளனர். இதன் மூலமாகவும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.