50 நாடுகளில் 1.43 லட்சம் கி.மீ. பயணம் செய்து ரஷியா வந்தடைந்த கால்பந்து உலக கோப்பை..!
உலக கோப்பை கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது. இதில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷியாவில் நடக்கிறது. சுமார் 32 அணிகள் பங்கேற்கும் 64 போட்டிகளை கொண்ட இத்தொடர் ரஷியாவின் 11 முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதன் இறுதிப்போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் ஜூலை 15-ம் தேதி நடக்கவுள்ளது.
ஒவ்வொரு முறை உலக கோப்பை கால்பந்து தொடர் தொடங்குவதற்கு முன் 36 செண்டி மீட்டர் உயரம் கொண்ட உலக கோப்பை, உலகை சுற்றி எடுத்து வரப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சுற்றுப்பயணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கியது.
அந்த கோப்பையானது ஆறு கண்டங்களில் சுமார் 50 நாடுகளில் சுமார் 1,43,000 கிலோ மீட்டர் துாரம் பயணம் செய்து ரஷியா வந்தடைந்தது. தற்போது ரஷியாவில் உள்ள நகரங்களை சுற்றி வருகிறது. இந்த பயணம் நாளையுடன் முடிகிறது. அதன்பின் இறுதிப்போட்டி நடைபெறும் லுஸ்நிகி மைதானத்தில் கோப்பை பாதுகாப்பாக வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.