நேபாளத்தில் அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 3 பேர் பலி!
நேபாளத்தில் உள்ள லாம்ஜங் கிராமப்புற நகராட்சியின் மையப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு மத்திய நேபாளத்தில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.42 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மார்சியங்கிடி கிராமப்புற நகராட்சியின் பூல்பூலேவின் மையப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காத்மாண்டு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக ராம்சரனின் தலைமை மாவட்ட அதிகாரி ஹோம் பிரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிலநடுக்கத்தில் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்ததால் 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் மூலமாக ஏற்பட்ட சேதங்கள் ஆகியவை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.