சீனாவில் 5.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – 2 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்!
சீனாவில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், இதனால் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை சீனாவின் தென்மேற்கு பகுதியாகிய சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு உள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 50 பேர் சிறிய அளவில் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள 22 வீடுகள் இடிந்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில பகுதியில் உள்ள மரங்களும் சாய்ந்து விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு பிறகு 62 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த 2008 ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் 7.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருந்ததும், பலர் மாயமாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.