5 தங்கம் உள்பட 7 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்
மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருவதை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். மேலும், இந்த போட்டிகளில் 38 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியின் அரையிறுதி சுற்று போட்டிகளுக்கு ஏழு இந்திய வீராங்கனைகள் தகுதிபெற்று பதக்கத்தை உறுதி செய்து இருந்தனர். இந்நிலையில் நேற்று இதன் இறுதி போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டிகளில், 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து, 54 கிலோ எடைப்பிரிவில் சாக்ஷி சவுத்ரி, 64 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் அன்குஷிதா போரோ, 57 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஷாஷி சோப்ரா, 51 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் ஜோதி குலியா ஆகியோர் இறுதி போட்டியில் தங்கம் வென்றார்.
மேலும், அனுபமா, நேகா யாதவ் ஆகியோர் வெண்கலப்பதக்கங்கள் வென்றுள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்து தங்கப்பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கங்கள் வென்று இந்தியா மொத்தம் 7 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்தது. ரஷியா 6 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், கஜகஸ்தான் 5 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.