சாத்தான்குளத்தில் ஆசிரியையிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்த வாலிபர் கைது..
தூத்துக்குடி; மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருவேம்பாடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் மகள் மகேசுவரி (வயது 22). இவர், சாத்தான்குளத்திலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து ஊருக்கு செல்வதற்காக, சாத்தான்குளம் பன்னம்பாறை விலக்கில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் அங்கு வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ஒருவன், மகேசுவரி கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொள்ள 3 பேரும் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். இதில் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், ஒருவன் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றனர்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மகேசுவரி கூச்சல் போட்டார். அவரது கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கொள்ளையர்கள் தப்பி சென்ற பகுதியில் போலீசார் வாகனத்தில் விரைந்து சென்றனர். அப்போது செட்டிகுளம் விலக்கு பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் மறுகால்குறிச்சியை சேர்ந்த சுப்பையா மகன் இசக்கிபாண்டி (25) என்பதும், மகேசுவரியிடம் நகை பறித்து கும்பலில் ஒருவன் என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த வழிப்பறி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.