விண்வெளிக்கு சென்ற 4 பேர்.. ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்..!
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்ற 4 பேர் பத்திரமாக பூமி திரும்பியுள்ளனர்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறது.
இதன்மூலம்,விண்வெளி பயணத்தில் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் வகையில்,அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலமாக விண்வெளி வீரர்கள் அல்லாத அமெரிக்காவின் ’ஷிப்ட் 4 பேமன்ட்ஸ் ’ நிறுவன தலைவர் மற்றும் கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர்,பால்கன் 9 ராக்கெட் மூலம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விண்வெளிக்கு சென்றனர்.
இதற்கிடையில்,புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் எப்படி வசிப்பது என்பது குறித்த பயிற்சிகள் அவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,பால்கன் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இன்ஸ்பிரேஷன் 4 எக்ஸ் விண்கலம், 3 நாட்களாக பூமியிலிருந்து 575 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்தது.
இந்நிலையில்,விண்வெளிக்கு சுற்றுலா மேற்கொண்ட நான்கு பேரும் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் பாராசூட் உதவியின் மூலம் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அட்லாண்டிக்கில் புளோரிடா கடற்கரையில் பத்திரமாகத் தரையிறங்கினர். இவர்கள் தரையிறங்கும் காட்சி யூடியூபில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும்,இதன் வீடியோவை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.அதன்பின்னர்,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் விண்வெளி சென்று திரும்பியவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
Splashdown! Welcome back to planet Earth, @Inspiration4x! pic.twitter.com/94yLjMBqWt
— SpaceX (@SpaceX) September 18, 2021
இதற்கு முன்னதாக,ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்கலம் மூலமாக, அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸோஸ் விண்வெளி சென்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.