பாகிஸ்தான் சொகுசு ஹோட்டலில் கார் குண்டுவெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!
பாகிஸ்தானில் உள்ள சொகுசு ஹோட்டலில் கார் குண்டு வெடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள தென்மேற்கு நகரமாகிய குவட்டாவில் உள்ள ஒரு சொகுசுக் ஹோட்டலில் கார் பார்க்கிங் பகுதியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த ஹோட்டலில் அன்று பாகிஸ்தானுக்கான சீனாவின் தூதர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சம்பவம் நடந்த பொழுது அவர் அந்த ஹோட்டலில் இல்லை என உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் அகமது அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரிகள், திடீரென கார் குண்டு வெடித்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்தில் வந்து பார்த்த பொழுது ஏற்கனவே நான்கு பேர் உயிரிழந்து விட்டதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலுக்கு அடியில் வெடிபருட்கள் நிறைந்த ஒரு கார் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.