டிரம்ப், ஜோ பிடன் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்.. 4 பேர் காயம்..!
அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிபெற்றார். தனது தோல்வியை ஏற்காத டிரம்ப், தேர்தலில் தோல்வியடையவில்லை எனவும், தேர்தலில் மோசடி குற்றச்சாட்டுகள் நடந்துள்ளது என கூறிவருகிறார். டிரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையில், ஜோ பிடனின் வெற்றியை மாற்றியமைக்க முயன்ற குடியரசுக் கட்சியினரின் மனுக்களை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவாக சனிக்கிழமை தலைநகர் உட்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், ஜோ பிடன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இதில், நான்கு பேர் காயமடைந்தனர், அதே நேரத்தில் இரண்டு போலீஸ்காரர்களும் காயமடைந்தனர். வன்முறை வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேரணிகளில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் முகமூடி அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.