கிரீஸ் நாட்டு அகதிகள் முகாம் தீ வைக்கப்பட்ட வழக்கில் 4 ஆப்கானிய அகதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

- கிரீஸ் நாட்டில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமில் கடந்த ஆண்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த தீ விபத்து தொடர்பான வழக்கில் ஆப்கானிய அகதிகள் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.
ஐரோப்பிய நாடுகளுக்குள் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக கடல் மற்றும் நிலப்பரப்பு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைந்து வருகின்றனர். இவர்களை ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் எல்லையிலேயே பிடித்து முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
மேலும் இந்த முகாம் குடியிருப்பு பகுதியில் இந்த அகதிகள் வெளியே செல்வதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக காவலர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதி முகாமாகிய கிரீஸ் நாட்டிலுள்ள அகதி முகாமில் கடந்த செப்டம்பர் மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 13 ஆயிரம் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் இந்த தீ விபத்து காரணமாக பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த விசாரணையில் அகதி முகாமில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் தான் திட்டமிட்டு இந்த விபத்தை ஏற்படுத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக கிரீஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று முடிவுக்கு வந்த நிலையில், அகதி முகாமில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் தான் திட்டமிட்டு இந்த தீ விபத்தை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தீ விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த அகதிகள் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.