இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இர்வின் சதம் ……….ஜிம்பாப்வே-344/8

Default Image

கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது.
ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கிரேக் இர்வின் 238 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 151 ரன்கள் குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இலங்கை தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்களான சக்கபுவா 12 ரன்களிலும், மஸகட்ஸா 19 ரன்களிலும் வெளியேற, பின்னர் வந்த முஸகன்டா 6 ரன்களில் நடையைக் கட்டினார். 
இதையடுத்து கிரேக் இர்வினுடன் இணைந்தார் சீன் வில்லியம்ஸ். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சீன் வில்லியம்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, 20.5 ஓவர்களில் 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது ஜிம்பாப்வே.
இதையடுத்து இர்வினுடன் இணைந்தார் சிக்கந்தர் ராஸா. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ஜிம்பாப்வே சரிவிலிருந்து மீள ஆரம்பித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இர்வின் 78 பந்துகளில் அரை சதமடிக்க, 39-ஆவது ஓவரில் 150 ரன்களை எட்டியது ஜிம்பாப்வே. அந்த அணி 154 ரன்களை எட்டியபோது சிக்கந்தர் ராஸா ஆட்டமிழந்தார். அவர் 36 ரன்கள் எடுத்தார். இந்தஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது.
பின்னர் வந்த பீட்டர் மூர் 19 ரன்களில் வெளியேற, மால்கம் வாலர் களம்புகுந்தார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடிய இர்வின் 146 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 2-ஆவது சதம் இது. அந்த அணி 260 ரன்களை எட்டியபோது வாலரின் விக்கெட்டை இழந்தது. அவர் 39 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களம்புகுந்த கிரெமர் 13 ரன்களில் வெளியேற, டிரிப்பானோ களம்புகுந்தார். இதன்பிறகு தொடர்ந்து அசத்தலாக ஆடிய இர்வின் 236 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது.
இர்வின் 151, டிரிப்பானோ 24 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 9-ஆவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்துள்ளது. இலங்கைத் தரப்பில் ஹெராத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்