2020 ஆம் ஆண்டில் 3 மில்லியன் இந்திய குழந்தைகள் டிடிபி முதல் தடுப்பூசியை பெறவில்லை-உலக சுகாதார நிறுவனம்..!
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மூன்று மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் டிப்தீரியா-டெட்டனஸ்-பெர்டுசிஸ் என்ற டிடிபி தடுப்பூசியின் முதல் தவணையை பெறவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 3.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் டிடிபி முதல் தவணையை தவறவிட்டதாகவும், 3 மில்லியன் குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசியை பெற தவறியதாகவும் கூறப்பட்டுள்ளது.
டிடிபி தடுப்பூசி என்பது மூன்று வகையான தொற்று நோய்களுக்கு எதிராக போடப்படும் தடுப்பு மருந்து. டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டுசிஸ் ஆகிய மூன்று நோய்களுக்கு எதிராக டிடிபி தடுப்பு மருந்தை செலுத்துகின்றனர்.
உலகம் முழுவதும் பரவி வரக்கூடிய பெருந்தொற்றான கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குழந்தைகளின் நோய்த்தடுப்பு முறை பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும், சுமார் 23 மில்லியன் குழந்தைகள் அவர்களின் வழக்கமான தடுப்பூசிகளை தவறவிட்டுள்ளனர்.
மேலும், இந்த ஆண்டில் 17 மில்லியன் குழந்தைகள் ஒரு தடுப்பூசி கூட பெறவில்லை. இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்கு உலக நாடுகள் கூச்சலிட்டாலும், மற்ற தடுப்பூசிகளை பெறுவதற்கு பின்னோக்கி சென்றுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு அம்மை, போலியோ, மூளைக்காய்ச்சல் போன்ற பேரழிவு தரக்கூடிய நோய்கள் பாதிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் அவை தடுக்கக்கூடிய நோய்கள் என்றும் தெரிவித்துள்ளார்.