புனிதத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு: 2 இஸ்ரேல் காவலர்கள் பலி
ஜெருசலேமில் புராதன நகரப் பகுதியில் யூதர்களால் மலைக்கோயில் என அழைக்கப்படும் இடத்தில் பைபிள் காலத்திய இரு கோயில்கள் அமைந்துள்ளன. இந்தத் தலம்தான் யூதர்களின் மிகப் புனிதமான தலமாக கருதப்படுகிறது.
அதே சமயத்தில், மெக்கா, மதீனாவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் முக்கியத்துவம் அளித்து வரும் அல்-அக்ஸா மசூதியும் அங்கு அமைந்துள்ளது. அந்த இடத்துக்குத் தனிப்பட்ட சொந்தம் கொண்டாடி யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் நடைபெறுவது உண்டு.
இந்நிலையில், புனிதத் தலம் அருகே பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூவர் இஸ்ரேல் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 போலீஸார் உயிரிழந்தனர்.
போலீஸாரைத் தாக்கிய பிறகு, அந்த மூவரும் அல்-அக்ஸா மசூதியை நோக்கி ஓடினர். அந்தப் பகுதியில் காவலுக்கு இருந்த போலீஸார் அம்மூவரையும் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தினர். துப்பாக்கிச் சூடு நடத்திய மூவரும், சுமார் 19 முதல் 29 வயது மதிக்கத்தக்கவர்களாக இருந்தனர் என்றும் உம் அல்-ஃபாஹம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்த துப்பாக்கிகள், கத்திகளை போலீஸார் கைப்பற்றினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகை நடைபெறுவதற்கு முன்னரே மசூதியை போலீஸார் மூடினர்.
இந்த சம்பவம் ஜெருசலேம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பதற்றத்தைத் தணிக்கும் விதமாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் ஆகிய இருவரும் தொலைபேசியில் உரையாடினர்.
இஸ்ரேல் போலீஸார் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மகமூத் அப்பாஸ், வழிபாட்டுத் தலம் அருகே யார் வன்முறையில் ஈடுபட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.
மலைக்கோயில் புனிதத் தலத்தைக் காக்க இஸ்ரேல் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று நெதன்யாஹு கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் உள்துறை அமைச்சர் கிலாட் எர்டான் கூறுகையில், மலைக் கோயில் மற்றும் அதன் சுற்றுப் பிரதேசங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றார்.