உருவாகுமா..? ‘புதுப்பேட்டை 2’ – ரசிகர்கள் கேள்வி
சென்னை : ‘புதுப்பேட்டை’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு தனுஷ் பதிலளித்துள்ளார்.
‘வேலையில்லா பட்டதாரி 2’ வெளியீட்டை முன்வைத்து, சமூகவலைதளத்தில் வீடியோ வடிவில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு தனுஷ் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘புதுப்பேட்டை’ 2-ம் பாகம் உருவாக வாய்ப்பிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு தனுஷ் கூறியதாவது:
‘புதுப்பேட்டை’ எனக்கு விருப்பமான திரைப்படங்களில் ஒன்று. அது என் இதயத்துக்கு நெருக்கமானதும் கூட. அந்தப் படம்தான் என்னை ஒரு நடிகனாக முன்னேற்றிய படம். அதுவும் எனது சகோதரர் செல்வராகவன் இல்லாமல் நடந்திருக்காது. காலத்தைக் கடந்து நிற்கும் வெற்றிப் படம் அது. மேலும் ஹாலிவுட்டில் முதன் முதலாக என் படம் ஒன்று விமர்சனம் செய்யப்பட்டதென்றால் அது ‘புதுப்பேட்டை’ தான்.
‘புதுப்பேட்டை’ 2-க்கான கதையை உருவாக்குவது கண்டிப்பாக எளிதான காரியமல்ல. அது மிகப்பெரிய சவால் நிரம்பியதும், இமாலய இலக்குமாகும். ஏனெனில் கொக்கி குமாரின் புதிய வாழ்க்கையை அது கையாள வேண்டும்.
ரசிகர்கள் ‘புதுப்பேட்டை’ 1-ன் மூலம் பெற்றுள்ள எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தாக வேண்டும். அது போலவே ‘புதுப்பேட்டை’ 2-ம் சம அளவில் சிறப்பாக அமைய வேண்டும் அல்லது அதற்கும் கூடுதலாக சிறப்பாக அமைய வேண்டும், பார்ப்போம், எதிர்காலம் நமக்காக என்ன வைத்திருக்கிறது என்று.
இவ்வாறு தனுஷ் பதிலளித்துள்ளார்