வங்கதேச வெள்ளப்பெருக்கில் சிக்கி 25 பேர் பலி..!
வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றக் கூடிய பணியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணத்தினால் ஆற்றின் கரை உடைந்து விட்டது. இதனால் அதன் அருகில் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது. இந்த வெள்ளத்தின் காரணத்தினால் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வீடுகளை இழந்தவர்களை பாதுகாப்பான பகுதிக்கு மாற்றுவதற்காக மீட்புப் பணி வீரர்கள் பள்ளிக்கூடங்களில் முகாம் அமைத்து அங்கே தங்க வைத்து வருகின்றனர். இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் இதுவரை 21 பேர் இறந்துள்ளனர். இதில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். மேலும், வெள்ளம் காரணமாக ஏற்பட்ட மலைச்சரிவில் 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக வங்கதேச நாட்டில் மின்சார சேவை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்களும் நாட்டில் வெள்ளப்பெருக்கு தீவிரமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.