24 நிமிடத்தில் 3 கோல்… 100 வது போட்டியில் கென்யாவை பந்தாடிய இந்தியா..!

Default Image

ஆட்டத்தின் 92 வது நிமிடம். ஆட்டம் முடிய இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன. மாற்றுவீரராகக் களமிறங்கிய பல்வந்த் சிங்கிடமிருந்து பந்தைப் பெற்றதும், கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமெடுக்கின்றன சுனில் சேத்ரியின் கால்கள். பின்னால் மூன்று கென்ய டிஃபண்டர்கள், முன்னே கென்யாவின் கோல்கீப்பர், நடுவில் சேத்ரி. அதேவேகத்தில் கென்யாவின் கோல் பாக்ஸை நெருங்கியதும், கூலான ஒரு ‘சிப்’. பந்து கோல்கீப்பரின் தலைக்கு மேலே பறந்து போஸ்ட்டுக்குள் விழுகிறது.

கோல் விழுந்ததும், தனக்கு முன்னால் இருக்கும் பேரிகார்டைத் தாண்டி, கூடியிருக்கும் ரசிகர்கள் முன்னால் சென்று, இரு கைகளையும் நீட்டியவாறு நிற்கிறார் சேத்ரி. மும்பை மைதானமே, ”சேத்ரி… சேத்ரி…” என ஆர்ப்பரிக்கிறது. தன் 100 வது போட்டியில் விளையாடும் ஒரு வீரருக்கு இதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்!  ‘இஞ்சுரி டைம்’ என்று சொல்லப்படுகின்ற ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் விழும் கோல்கள் தான் ரசிகர்களின் உற்சாகத்தை உச்சகட்டத்துக்கு கொண்டு செல்லும். சேத்ரி அடித்த இரண்டாவது கோல், அப்படிப்பட்ட ஒரு கோல்தான். சேத்ரிக்காக கூடியிருந்த 9,000 ரசிகர்களுக்கும் இதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்!

சேத்ரி

‘இன்டர்கான்டினென்டல் கப்’ தொடரில் விளையாடிவரும் இந்திய அணி, தனது இரண்டாவது போட்டியில் கென்யாவை நேற்று சந்தித்தது. இந்திய கேப்டன் சுனில் செத்ரி இரண்டு கோல்களும், ஜேஜே லால்பெகுலா ஒரு கோலும் அடித்து அசத்த, 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தியது இந்திய அணி. ஆட்டத்தின் இறுதிவரை காத்திருந்த ரசிகர்களின் உற்சாக ஆரவாரங்கள், கொட்டித்தீர்த்த பேய்மழையையே ஓவர்டேக் செய்ய, இந்த ஆட்டத்தில், சூப்பராக வெற்றிவாகை சூடினர் நம் இந்தியப் புலிகள்.

ஆட்டத்தின் முதல்பாதி முழுவதுமே கனமழை பெய்தது. அதனால், மைதானம் முழுவதுமே மழைநீர் குளம்போல் நிரம்பியிருக்க, பந்தை வசப்படுத்த முடியாமல் இரு அணி வீரர்களும், மிகுந்த சிரமத்துடனே விளையாடினர். இருபுறமும் பந்து மாறி மாறி சென்று வந்தாலும், இந்தியாவைக் காட்டிலும், கென்யாவின் கையே சற்று ஓங்கி இருந்தது. முதல்பாதியில் கோல்கள் ஏதும் அடிக்கப்படவில்லை.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஒருவழியாக மழை நின்றது; ஆட்டமும் சூடு பிடிக்கத் தொடங்கியது. கென்யாவின் அட்டாக்கை சமாளிக்க முடியாமல், தொடக்கத்தில் திணறியது இந்திய அணி. நல்ல வேளையாக, இந்திய டிஃபென்ஸின் `ஒன்மேன் ஆர்மி’யான சந்தேஷ் ஜிங்கன், களத்தில் சூறாவளியாகச் சுழன்று, கென்ய வீரர்களின் கோல் வாய்ப்புகளை எல்லாம் கிளியர் செய்துவிட்டார். கோல் அடிக்க, இந்திய வீரர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.

chhetri

ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில், யாருமே எதிர்பாராத திருப்பமாக, இந்தியாவுக்கு ஒரு `பெனால்டி’ கிடைத்தது. ரசிகர்கள் மத்தியிலும், வீரர்கள் மத்தியிலும் பிரஷர் எகிறிக்கொண்டிருக்க, பெனால்டியை எடுத்தார், தன் 100-வது போட்டியில் விளையாடிய இந்தியக் கேப்டன் சுனில் சேத்ரி. மிகுந்த பலத்துடன் ‘டாப் லெஃப்ட் கார்னருக்கு’ சேத்ரி உதைத்த பந்து, கென்ய கோல்கீப்பரின் கையில் பட்டாலும், ஷாட்டின் வேகத்தால் கோலாக மாறியது. மைதானமே உற்சாகத்தில் அலற, அமைதியாக தன் குடும்பத்தினர் இருந்த திசையை நோக்கி, கைகாட்டிப் புன்னகைத்தார் சேத்ரி. அதன்பிறகு, ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

அடுத்து மூன்றாவது நிமிடத்திலேயே, இந்தியாவின் இரண்டாவது கோலை அடித்து அசத்தினார் ஸ்டைரக்கர் ஜேஜே. இந்தியவீரர் உதைத்த பந்து, கென்ய டிஃபெண்டரின் காலில் பட்டு, கோல்பாக்சிற்குள் இருந்த ஜேஜேவிடம் சிக்க, கிடைத்த அந்த ‘லூஸ் பாலை’ தவறவிடாமல், துரிதமாக உதைத்து கோலாக்கி அசத்தினார் இந்தியாவின்  ‘ஸ்னைப்பர்’.

chhetri

தொடர்ந்து இரு அணிகளுமே அட்டாக்கில் ஈடுபட, பந்து இருபுறமும் சென்றபடியே இருந்தது. கென்ய வீரர்கள், கடைசி நேரத்தில் கிடைத்த சில வாய்ப்புகளை வீணடித்தனர். ஆனால், இரண்டு கோல் முன்னிலையிலும் திருப்தியடையாத சேத்ரி, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் இந்தியாவின் மூன்றாவது கோலை அடித்தார். இது சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக அவர் அடித்த 61-வது கோல். கடைசிவரை, கென்யாவால் பதில் கோல் திருப்பமுடியாமல் போக, 3-0 என்ற கோல் கணக்கில், இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியாவின் தடுப்பு அரணான சந்தேஷ் ஜிங்கன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம், இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

உலகளவில் தற்போது விளையாடிவரும் வீரர்களில், தனது தேசிய அணிக்காக விளையாடி அதிக கோல்கள் அடித்துள்ள டாப் ஸ்கோரர்கள் பட்டியலில், போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தைப் பிடித்து, புதிய சாதனை படைத்திருக்கிறார் சேத்ரி.

indian fans

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Madurai Airport Protest
MTC - Train Cancelled
Kasthuri Arrest
Hockey Asia Cup
Trump - Zelensky
Dhanush - Nayanthara