கிரீஸில் இரண்டு கப்பல்கள் மூழ்கி 21 பேர் உயிரிழப்பு.. பலர் காணவில்லை!
கிரீஸில் இரண்டு புலம்பெயர்ந்த கப்பல்கள் மூழ்கியதில் 21 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காணவில்லை என அதிர்ச்சி.
கைதிரா (கிரீஸ்): நேற்று கிரீஸ் தீவின் நீரில் சிதறிய இடிபாடுகளுக்கு மத்தியில் உடல்கள் மிதந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கிரீஸ் தீவில் சென்ற இரண்டு புலம்பெயர்ந்த படகுகள் மூழ்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலரைக் காணவில்லை என கூறப்படுகிறது. சுமார் 40 பேரை ஏற்றிச் சென்ற டிங்கி கப்பல் மூழ்கியதில் 16 ஆபிரிக்க இளம் பெண்களும் ஒரு இளைஞனும் சடலமாக மீட்கப்பட்டதாக கிழக்குத் தீவான லெஸ்போஸில் உள்ள கடலோரக் காவல்படை தெரிவித்திருந்தது. மேலும், 10 பெண்கள் மீட்கப்பட்ட நிலையில், 13 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட பெண்கள் முழு பதற்றத்தில் இருந்ததால், என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள நாங்கள் இன்னும் முயற்சித்து வருகிறோம் என்று கடலோர காவல்படை செய்தி தொடர்பாளர் நிகோஸ் கொக்கலாஸ் அரசு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். பெண்கள் அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள். நிலத்திலும், கடலிலும் தேடுதல் பனி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது மீட்புப் பணியானது கைதிரா தீவில் இருந்து மேற்கில் பல நூறு கிலோமீட்டர்கள் (மைல்) தொலைவில் தொடங்கப்பட்டது, அங்கு ஒரு பாய்மரப் படகு பாறைகளில் மோதி மூழ்கியுள்ளது என கூறியுள்ளார்.
பாய்மரப் படகில் இருந்து மிதக்கும் குப்பைகளுக்கு மத்தியில் குறைந்தது நான்கு புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் காணப்பட்டன. உடல்கள் மீட்கப்பட்டதும் இறப்பு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இரண்டு கப்பலில் ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 80 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 11 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கைதிராவில் ஒரே இரவில் 70 கிமீ (45 மைல்) வேகத்தில் காற்று வீசியதால், கயிறுகளில் ஒட்டிக்கொண்டு உயிர் பிழைத்தவர்கள் செங்குத்தான பாறைகளில் பாதுகாப்பாக இழுக்கப்பட்டனர்.
இது நம்பமுடியாத காட்சியாக இருந்தது. துருக்கிக்கு மேற்கே 400 கிலோமீட்டர்கள் (250 மைல்) தொலைவில் உள்ள கைதிரா, கிரீஸைக் கடந்து நேரடியாக இத்தாலிக்குச் செல்ல கடத்தல்காரர்கள் அடிக்கடி பயன்படுத்தும் பாதையில் உள்ளது என்றும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இரண்டு கப்பல்கள் மூழ்கியதில் பலி எண்ணிக்கை 21-ஆக உயர்ந்ததில், இன்னும் பலர் காணவில்லை என தகவல் தெரிவிக்கப்படும் நிலையில், இந்த கொடிய சம்பவங்கள் அண்டை நாடுகளான கிரீஸ் மற்றும் துருக்கி இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.