இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் டி-20 தொடரின் முதல் ஆட்டம் இன்று தொடங்குகிறது….!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டம் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்றுத் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரையும் வெல்லும் முனைப்போடு களமிறங்குகிறது.
அதேநேரத்தில் ஒரு நாள் தொடரில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரை வென்றே ஆகவேண்டும் என்று தீவிரமாக களமிறங்குகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஷிகர் தவன் முதல் டி20 ஆட்டத்தில் களமிறங்குகிறார். ரோஹித் சர்மா – ஷிகர் தவன் கூட்டணி இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கவுள்ளது. இவர்கள் இருவருமே நல்ல ஃபார்மில் இருப்பது கூடுதல் பலமாகும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஒரு சதம், இரு அரை சதங்களுடன் 296 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்திலும் அதிரடியாக ரன் குவிப்பார் என நம்பலாம்.
மிடில் ஆர்டரில் கேப்டன் விராட் கோலி மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். 4-வது இடத்துக்கு மணீஷ் பாண்டே இடம்பெறுவார். கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா என வலுவான பேட்ஸ்மேன்கள் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர்.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், ஹார்திக் பாண்டியா கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் யுவேந்திர சாஹலுடன் 2-வது சுழற்பந்து வீச்சாளராக இடம்பெறுவார் குல்தீப் யாதவ்.
ஆஸ்திரேலிய அணியில் மோசஸ் ஹென்ரிக்ஸ், டேனியல் கிறிஸ்டியான், விக்கெட் கீப்பர் டிம் பெய்ன், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரென்ட்ராப் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.
டேவிட் வார்னர் – ஆரோன் ஃபிஞ்ச் ஜோடி ஆஸ்திரேலியாவுக்கு வலுவான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கும். ஒரு நாள் தொடரில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி 250 ரன்கள் குவித்திருக்கும் ஆரோன் ஃபிஞ்ச் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், டேனியல் கிறிஸ்டியான் இருக்கின்றனர். பிக்பாஷ் உள்ளிட்ட டி20 தொடர்களில் தொடர்ந்து அசத்தி வரும் ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியான் பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்க்கிறார்.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் நாதன் கோல்ட்டர் நீல், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரென்ட்ராப் ஆகியோரும் சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பாவும் இருக்கின்றனர்.
இந்தியா அணியின் விவரம்
ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே/கே.எல்.ராகுல், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ்/அக்ஷர் படேல், யுவேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார்/ஆசிஷ் நெஹ்ரா, ஜஸ்பிரித் பூம்ரா.
ஆஸ்திரேலியா அணியின் விவரம்
டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்ரிக்ஸ்/மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியான், டிம் பெய்ன் (விக்கெட் கீப்பர்) , நாதன் கோல்ட்டர் நீல், ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரென்ட்ராப்.