சிஎஸ்கே 2.0:விசில் போடு மச்சி….
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஐபிஎல் போட்டியில் மீண்டும் களமிறங்கவுள்ளது சிஎஸ்கே.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என். சீனிவாசன், ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும் என்று கூறினார். அவர் மேலும் பேசியதாவது: நீங்கள் சிஎஸ்கே ரசிகராக இருந்தால் தோனி 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குவதைக் காண விரும்புவீர்கள். மஞ்சள் உடையில் அவரை ஆடுகளத்தில் காணவும் விரும்புவீர்கள். எல்லாவிதத்திலும் இவை நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஒரு பெரிய பட்டாளத்துடன் அடுத்த வருடம் மீண்டும் களத்தில் இறங்குவோம்.
ஐபிஎல் போட்டியில் இடம்பெறாததால் சிஎஸ்கேவின் மதிப்பு குறையவில்லை. தோனியினால்தான் சிஎஸ்கே இவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளது. 2008-ல் நாங்கள் எடுத்த முக்கிய முடிவு, தோனியை அணியில் சேர்ப்பது. 2007-ல் அவர் உலகக்கோப்பை வென்றார். தோனியின் திறமை, தலைமைப்பண்பினால் சிஎஸ்கே பேரும் புகழும் அடைந்தது. சென்னையை அவர் மிகவும் விரும்பினார். ரசிகர்களும் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்கள். நியாயமற்ற முறையில் சிஎஸ்கேவுக்குத் தடை விதிக்கப்பட்டது. யாரும் யாரையும் குற்றலாம். ஆனால் சிஎஸ்கே வீரர் ஒருவர் கூட எந்தத் தவறிலும் ஈடுபடவில்லை. அவர்கள் அணிக்காக விளையாடினார்கள். அவ்வளவுதான். பொறாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் கடினமான உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று பேசினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடட் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜான் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: இது புதிய தொடக்கம். சமூகவலைத்தளத்தில் இதுகுறித்து நிறைய தகவல்களைப் பதிவு செய்துவருகிறோம். இரண்டு வருடங்களா ஐபிஎல்-லில் இல்லாததால் சிஎஸ்கே என்கிற பிராண்டுக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை. விளம்பரம் தொடர்பாக நிறுவனங்களிடமிருந்து இப்போதும் நிறைய தகவல்கள் கோரப்படுகின்றன. விளம்பரதாரர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இப்போதும் உள்ளது. அணி வீரர்களைத் தக்கவைக்க அனுமதித்தால் தோனியை நிச்சயம் தக்கவைத்துக் கொள்வோம். 2015-ல் அணியில் பணியாற்றிய அனைத்து பயிற்சியாளர்களையும் மீண்டும் அழைக்கவுள்ளோம். சிஎஸ்கே என்றால் நம்பகத்தன்மைதான் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.