2020-ஐ விட, 2021ம் வருடம் மிகவும் மோசமானதாக இருக்கும் – உலக உணவு கழக தலைவர் டேவிட் பேஸ்லி
2020-ஐ விட, 2021ம் வருடம் மிகவும் மோசமானதாக இருக்கும்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பரவல், தற்போது வரை ஆட்டிப்படைத்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த வைரஸ் பரவல் முதலில் சீனாவில் பரவியது. அதனை தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்கா ஆற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை பரவி வருகிறது.
இதனையடுத்து, உலக உணவு கழகத்திற்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்திற்கு, உலக உணவு கழக தலைவர் டேவிட் பேஸ்லி பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஐ.நா அமைப்புக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது, உலக நாடுகளை எச்சரிப்பதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், 2020-ஐ விட, 2021ம் வருடம் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2021ம் ஆண்டில், மிகப்பெரிய அளவிலான பஞ்சம் ஏற்படும். அதனை சமாளிக்க பில்லியன் கணக்கான டாலர் செலவிட வேண்டி இருக்கும். உலக நாடுகளின் தலைவர்கள் பொருளாதார உதவி மற்றும் பிற உதவிகள் செய்ததன் காரணமாக, 2020-ல் பஞ்சத்தை தவிர்க்க முடிந்தது என தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், பொருளாதார சரிவை சந்திக்கும். 2020ம் ஆண்டு கையிருப்பு இருந்த பணம், 2021-ல் இருக்காது என்றும், இன்னும் ஒரு முழு ஊரடங்கு அலை இருக்கிறது என்றும் எச்சரித்துள்ளார்.