2018 காமன்வெல்த் போட்டி :துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார் ஜித்துராய் – 8 தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 3வது இடத்தில் இந்தியா…!
இந்தியா காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியின் ஆடவர் பிரிவிலும், மகளிர் பிரிவிலும், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஐந்தாவது நாளான இன்று, ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஜித்துராய் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதேபிரிவில், மற்றொரு இந்திய வீரரான ஓம் மித்தர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதையடுத்து, நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில், இந்திய வீராங்கனை மெஹுலி கோஸ் வெள்ளிப் பதக்கத்தையும், அபூர்வி சந்தேலா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
முன்னதாக நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் 105 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பர்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் 8 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலத்துடன், பதக்கப்பட்டியலில் இந்தியா மீண்டும் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.