2018 காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் தமிழக வீரர் சதீஷ்குமார் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இருவர் பளு தூக்கும் போட்டிகளில் தங்கம்…!
ஒரே நாளில் தமிழக வீரர் சதீஷ்குமார் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இருவர் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாளான சனிக்கிழமையன்று 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டி நடந்தது. இதில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சதீஷ் குமார், கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த்திலும் தங்கம் வென்றவர். 2016ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்கவும் தகுதி பெற்றவர் சதீஷ் குமார். காமன்வெல்த் போட்டியில் சதீஷ் குமார் தங்கம் வென்றதை அடுத்து ஊர் மக்களுக்கு அவரது பெற்றோர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
காமன் வெல்த் போட்டியில், 85 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்கும் போட்டியில் இந்தியரான வெங்கட் ராகுல் ரகாலா (Venkat Rahul Ragala) என்பவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் 4-ஆம் இடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பளுதூக்கும் வீரர்களால் தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேருவதாக தெரிவித்துள்ளார். தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கும், வெங்கட் ராகுல் ரகாலாவுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தங்கப்பதக்கம் வென்ற சதீஷ் குமாருக்கு 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சதீஷ் குமாரின் சாதனையால் இந்தியாவும், தமிழகமும் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதே போல துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் சதீஷ் குமாரை வாழ்த்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.