புதிய ரூ.2000 நோட்டுக்கள் தடை செய்யப்படாது : மத்திய அமைச்சர் உறுதி
புதுடில்லி : ரூ.200 நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு ரூ.2000 நோட்டுக்கள் வாபஸ் அல்லது தடை செய்யப்படாது என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 08 ம் தேதி, பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். இதற்கு ஈடு செய்ய புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. ஆனால், அதற்கு சில்லறை மாற்ற முடியாமல் பலர் சிரமப்பட்டனர். இந்நிலையில், சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தியது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்களை அச்சிடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மீண்டும் மத்திய அரசு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க உள்ளது என்றும் 2000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் மறுத்துவிட்டனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சந்தோஷ்குமார், ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடப்படுவதை நிறுத்தியது வேறு விவகாரத்திற்காக. அது குறித்து ரிசர்வ் வங்கி விரைவில் விளக்கம் அளிக்கும். ரூ.200 நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் மத்திய அரசிற்கு இல்லை என தெளிவுபடுத்தி உள்ளார்.