மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு!
- மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது
- ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹஸ்வீ கிராம மக்கள் 20 பேர் நேற்று சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே கைதுசெய்யப்பட்டு மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து மியான்மர் மக்கள் மற்றும் உலகின் பல நாடுகளில் உள்ள மக்களும் மியான்மரில் நடக்கக்கூடிய ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக மியான்மரில் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும், ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் பல்வேறு கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் உருவாகியுள்ளது.
இந்த கிளர்ச்சியாளர்களும் ராணுவத்தினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் ராணுவம் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் பல்வேறு உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனை அடுத்து மியான்மரில் உள்ள ஹஸ்வீ எனும் கிராமத்தில் கிளர்ச்சியாளர் ஒருவரை மியான்மர் ராணுவத்தினர் நேற்று கைது செய்தனர்.
எனவே அந்த நபரை விடுவிக்கும் படி, கிராம மக்கள் இணைந்து ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மியான்மர் ராணுவம் அந்த கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 20 கிராம மக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.