ரஷ்யா தாக்குதலில் 198 பொதுமக்கள் உயிரிழப்பு – உக்ரைன் சுகாதாரத்துறை அறிவிப்பு!
ரஷ்யா தாக்குதலில் உக்ரனை சேர்ந்த 198 பொதுமக்கள் உயிரிழப்பு என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவிப்பு.
உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து முன்னேறிக்கொண்டே வருகிறது. ஒருபக்கம் உக்ரைன் – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், மறுபக்கம் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஆயுதங்கள் தேவை என்று அறிவித்திருந்த நிலையில், உக்ரைன் அதிபர் வேண்டுகோளை ஏற்று போலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.
ரஷ்யா படைகள் உக்ரைன் தலைநகரான கீவ்-வை தாக்கி நெருங்கு வருகிறது. தலைநகரை பிடித்துவிட்டால் மொத்த நாட்டையும் கைப்பற்றிய சூழல் உருவாகும் என ரஷ்ய தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்ஜி லாவ்ரோம் அறிவித்திருந்தார். உக்ரைனில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டு வரும் நிலையில், உக்ரைன் நாட்டை ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை, குழந்தைகளுக்காக போராடுகிறோம் என உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார்.