19 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்! அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு!
19 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனால், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பல தொழில் நிறுவனங்களும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதனால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், முன்னணி விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், 19 ஆயிரம் விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்க 25 மில்லியன் டாலர் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த நிதியும் காலியானதால், செப்.1- ம் தேதி முதல் பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், அரசு நிதி வழங்கும் பட்சத்தில், இந்த வேலை இழப்பு தவிர்க்கப்படலாம் என்றும், இல்லையேல் 19 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்க முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.