18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது… அதிரடி காட்டும் சு.சுவாமி!
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும் அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனு கொடுத்தது தொடர்பாக செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அடிக்கும்படி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ. ஜக்கையன், முதலமைச்சருக்கு எதிராக மனு கொடுத்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறியிருந்தார். இந்த நிலையில், சபாநயாகர் அளித்த காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்காததால், 18 எம்.எல்.ஏ.க்களையும் கட்சி தாவல் தடைச்சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கம் செல்லாது என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் 2 வாரத்திற்கு மட்டும் குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சு.சுவாமி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் இருந்து முடிவு வரும் வரை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.