ரூ.1800 கோடி மதிப்பில் வடிகால் பணி தொடங்கப்படும் !தேங்கியிருந்த மழை நீர் அகற்றபட்டு விட்டதாக முதல்வர் அறிவிப்பு..
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது .
கனமழையால் தாழ்வான பகுதியில் தேங்கியிருந்த நீரெல்லாம் அகற்றப்பட்டுவிட்டன. ரூ.1800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் பணி தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழையினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பின்னர், முதல்வர் பழனிசாமி ”கடந்த 31-ஆம் தேதி, 1-ஆம் தேதி, 2-ஆம் தேதி, மூன்று நாட்களாக, சென்னை மாநகரம் மற்றும் சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டப் பகுதியில், கனமழையின் காரணமாக ஒருசில இடங்களில், தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்ததைக் கண்டறிந்து, உடனடியாக மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் இருக்கின்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரிலும், போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து பணியாற்றி, இப்பொழுது கனமழையால் தாழ்வான பகுதியில் தேங்கியிருந்த நீரெல்லாம் அகற்றப்பட்டுவிட்டன.
மேலும், நாங்கள் பார்வையிடுகின்றபொழுது, பொதுமக்கள், இதற்கொரு நிரந்தரத் தீர்வு வேண்டுமென்று கேட்டிருக்கின்றார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கனமழை பெய்கின்றபொழுது தாழ்வான பகுதியில் தேங்கியிருக்கும் நீரை வடிகால் வசதி கொண்டு அகற்றுவதற்காக, சட்டப்பேரவையில், சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவிப்பு செய்து, முதற்கட்டமாக 1100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 386 கிலோமீட்டருக்கு ஆணையிடப்பட்டு, 300 கிலோமீட்டர் இப்பொழுது வடிகால் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றது.
எஞ்சிய பணி விரைந்து கட்டி முடிக்கப்படும். மேலும், ஜைகா உதவியுடன் சுமார் 1800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எஞ்சியுள்ள வடிகால் பணி துவங்கப்படும்.