1700 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானியர்கள் காலத்து கோழி முட்டை கண்டுபிடிப்பு!
- ரோமானியர்கள் காலத்தில் இருந்த கோழி முட்டை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு.
- கண்டுபிடிக்கப்பட்ட 4 முட்டைகளில் 3 உடைந்துஇவிட்டது. 1 மட்டும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில், பக்கிங்ஹாம்ஷையரின் அய்லெஸ்பரி எனுமிடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழங்கால பொருட்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வந்தனர். அப்போது அவர்களுக்கு ஓர் குழியில் நீர் உள்ள இடத்தில் நான்கு கோழி முட்டைகள் கிடைத்தன. அவைகள் 1,700 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த முட்டை ரோமானியர்கள் காலத்தில் புழங்கப்பட்ட கோழிமுட்டை என கூறப்பட்டுள்ளது. அதனுடன் கூடைகளில் ரோமானியர்கள் புழங்கிய சில பொருள்கள் இருந்துள்ளன. டஜன் கணக்கில் நாணயங்கள், காலணி, மறக்கருவிகள் இருந்துள்ளன. ரோமானியர்கள், பாதாள உலக கடவுளுக்காக இப்படி கூடைகளில் பொருட்களை வைத்து வீசி சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கண்டுபிடித்த 4 முட்டைளில் மூன்று முட்டைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எடுக்கும்போது உடைந்துவிட்டது. அதனால் அங்கு பெரிய துர்நாற்றம் வீசியதாம். மீதமுள்ள ஒரு முட்டையை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். இதே போல இங்கிலாந்தில் உள்ள ரோமானியர்களின் கல்லறைகளில் கோழி எலும்பு கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரோமானியர்கள் கோழி முட்டை மீது, அடுத்த ஜென்மம் மற்றும் கருவுறுதல் தொடர்பான நம்பிக்கை வைத்து இருந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.