பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 17 பேர் உடல் சிதறி பலி
பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குவெட்டா நகரத்தில் பாதுகாப்பு படை வீரர்களை கொல்ல குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உடல் சிதறி பலியானார்கள்.
இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர் ஒருவர் கூறுகையில், இது ஒரு தற்கொலை தாக்குதல் எனவும், தாக்குதலை நிகழ்த்தியவர் 25 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தாங்கிய மோட்டார் சைக்கிளின் மூலம் பாதுகாப்பு படை வீரர்கள் வந்த வாகனத்தில் மோதி இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளதாக கூறினார்.
மேலும் இந்த விபத்தில் பொதுமக்கள் 15 பேர் உட்பட 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குண்டுகள் வெடித்ததில் அருகிலிருந்த வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோர விபத்துக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படை தலைவர் ஜாவேத் பஜ்வா மற்றும் உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் பக்டி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவத்துள்ளனர்.
நடந்த இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.