அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருந்ததால் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன்!
அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் 13 வயது சிறுவன் ஒருவன் ஆயுதம் வைத்திருந்ததாக கூறி போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் ஏற்கனவே டான்ட் எனும் கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பொதுமக்களிடையே அச்சம்பவத்திற்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள 13 வயது சிறுவன் ஒருவன் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சி சிகாகோ போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. 9 நிமிடம் உள்ள இந்த வீடியோ காட்சியில், அடையாளம் தெரியாத ஒரு காவல் அதிகாரி ஒருவர் 13 வயதுடைய ஆடம் டோலிடோ எனும் பெயருடைய சிறுவனை மடக்கி, அவனது கைகளை உயர்த்தச் சொல்லி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இந்த 13 வயது சிறுவன் ஆடம் டோலிடோ கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அவருடன் 21 வயதுடைய ரூபன் எனும் இன்னொரு நபர் இருந்ததாகவும், அவர் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் அச்சிறுவனை சுடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் அருகிலுள்ள வேலிக்கு அருகில் துப்பாக்கியை ஆடம் டோலிடோ தூக்கி வீசி உள்ளார் எனவும் போலீசார் கூறியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலீசார் துப்பாக்கியையும் மீட்டுள்ளதாக தெரிவித்திருந்தாலும், 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.