ஜப்பான் நிலநடுக்கம்! இதுவரை 12 பேர் உயிரிழப்பு… தற்போதைய நிலவரம் என்ன?

japan earthquake

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் 5.5 ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை பதிவானது என அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே சுமார் 15 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த அடுத்தடுத்த நிலநடுக்கத்தால், வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது. இருப்பினும், சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் இருக்கும் என அஞ்சப்பட்டது.

இதனிடையே, ஜப்பான் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதில், டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடற்கரையோர மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது. இந்த சுனாமி, சுமார் 5 மீட்டர் உயரத்துக்கு தாக்கக்கூடும் என கூறியிருந்த நிலையில், 1 முதல் 5 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.

மேலும் பல பேரிடர்களுக்கு தயாராக இருங்க.. ஜப்பான் பிரதமர் எச்சரிக்கை!

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக தகவல் வெளியானது. ஜப்பானின் மேற்கு பகுதிகளில் கிட்டத்தட்ட நேற்று 3 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவானது என தெரிவிக்கப்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மின்சாரம் துண்டிப்பு, சாலை போக்குவரத்து துண்டிப்பு, பல்வேறு நகரங்களில் பாதுகாப்பு கருதி ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

நிலநடுக்கம், சுனாமி அலைகள் தாக்கியதை தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு விரைந்த மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல பேரிடர்களுக்கு ஜப்பான் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று ஜப்பானை உலுக்கிய இந்த பயங்கர நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்தாகவும், பலர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், இஷிகாவாவில் மீண்டும் புதிய நிலநடுக்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தற்போது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. மத்திய ஜப்பானைத் தாக்கிய ஒரு பெரிய நிலநடுக்கம் ஏராளமான உயிரிழப்புகளுடன் பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்