12 மணி நேர வேலை – முதல்வரை சந்திக்கும் கூட்டணி கட்சிகள்
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெறக்கோரி முதல்வரை சந்திக்கும் கூட்டணி கட்சிகள்.
தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோழமை கட்சிகளின் எதிர்ப்பையும் தாண்டி இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர்கள் ஆலோசனை
இந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 அமைச்சர்கள் கொண்ட குழு தொழில்சங்கங்களுடன் ஆலோசனை நடக்கவுள்ள நிலையில், மசோதா சட்டத்துறைக்கு வைக்கப்பட்டுள்ளது.
முதல்வரை சந்திக்கும் கூட்டணி கட்சிகள்
இந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெறக்கோரி, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று இரவு 7 மணிக்கு முதல்வரை சந்திக்க உள்ளனர். இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்த மசோதா வாபஸ் பெறப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.