சிங்கப்பூரில் 12-15 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி..!
12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பைசர் – பையோஎன்டெக் கொரோனா தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்குதல் வேகமெடுத்துள்ளது. இதனால், சிங்கப்பூர் அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் அதிகமான அளவில் சிறுவர்களுக்கு தொற்று ஏற்படுவதால் அதை சரி செய்யும் பொருட்டு 12 – 15 வயது வரை உள்ளவர்களுக்கு பைசர்-பையோஎன்டெக் என்ற நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஓங் இ காங்.
மேலும், சமீப காலமாக பள்ளி மாணவர்கள் அதிகளவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுகின்றனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ சேவைத்துறை இயக்குனர் கென்னத் மாக் தெரிவித்தார். மேலும், சிறுவர்களிடம் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால், 12 – 15 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று ஓங் இ காங் கூறியுள்ளார்.
அதன் பிறகு, தற்போது பைசர்-பையோஎன்டேக் தடுப்பூசி போடுவதால் அதிக செயல்திறன் மற்றும் பாதுகாப்பு ஏற்படும் என்று சுகாதார அறிவியல் ஆணையமும், நிபுணர் குழுவும் ஓப்புதல் அளித்துள்ளது. மேலும் இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் பெரியவர்களுக்கு கிடைக்கக்கூடிய செயல்திறன், பாதுகாப்பு 12-15 வயது சிறுவர்களுக்கு கிடைக்கும் என்று திரு ஓங் கூறியுள்ளார்.