ரூ.10 லட்சம் பெறும் பள்ளி எது? கண்டறிய வருகிறது குழு
திருப்பூர் : கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடிய அரசு பள்ளிக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, கடந்த, 15ல், அனைத்து அரசு பள்ளிகளில், காமராஜரின் பிறந்தநாள், கொண்டாடப்பட்டது. கட்டுரை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. காமராஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாடகம், அரசியல் மற்றும் சமூகப்பணி குறித்து கலைநிகழ்ச்சி, கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடிய அரசு பள்ளிகளுக்கு, அரசு சார்பில், சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவில் இருந்தும், நான்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளது. துவக்க பள்ளிக்கு, 25 ஆயிரம் ரூபாய்; நடுநிலைப்பள்ளிக்கு, 50 ஆயிரம்; மேல்நிலைப்பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.இப்பள்ளிகளை தேர்வு செய்ய, மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு, விரைவில் தாலுகா வாரியாக பள்ளிகளை ஆய்வு செய்யவுள்ளனர். அக்குழுவின் அடிப்படையில், பரிசு பெறும் பள்ளிகளின் பெயர் அறிவிக்கப்படும்.