ஸ்டாலின் மீது கடும் பாய்ச்சலில் சைதை துரைசாமி
சென்னை மேயர் சைதை துரைசாமி சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது வீட்டில் அளித்த பேட்டியில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அடுக்கடுக்கான பல குற்றசாட்டுகளை வைத்தார். மேலும் இன்னும் அவதூறு பரப்பினால் வழக்கு போடப்படும் என எச்சரித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
‘அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக ஸ்டாலின் அவர்கள் என்மீது அடுக்கடுக்கான பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்.
என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை. ஆனால் என் வீட்டில் சோதனை நடந்ததாக மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். இது போன்று அவதூறாக பொய் பேச வேண்டாம் என்று ஸ்டாலினுக்குபல முறை கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால் அதன் பிறகும் அவர் திட்டமிட்டு பொய் புகார்களை பரப்பி வருகிறார்.
நான் சென்னை மேயராக 5 ஆண்டு காலம் இருந்த காலத்தில் மு.க.ஸ்டாலின் அந்தபகுதி சட்டமன்ற உறுபினராக இருந்த காலத்தில் நடைபெற்ற பல ஊழல்கள், குறைகளை ஆதாரப்பூர்வமாக மன்றத்தில் எடுத்துரைத்துள்ளேன். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். அவரது வெற்றி செல்லாது என்று நான் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த காரணங்களால் தான் மு.க.ஸ்டாலின் என்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்லுகிறார்.
கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது எனது லட்சியம் அதற்காக மனிதநேய அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட போட்டித்தேர்வு பயிற்சிகளை நடத்தி வருகிறேன்.
எம்.ஜி.ஆர். எனக்காக கொடுத்த சி.ஐ.டி.நகர் வீட்டைக்கூட மனித நேய அறக்கட்டளைக்கு இலவசமாக வழங்கிவிட்டு அந்த அறக்கட்டளைக்கு வாடகை கொடுத்து நான் குடியிருந்து வருகிறேன்.
வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு பின்புறம் 13 கிரவுண்டு இடத்தில் இலவச திருமணமண்டபம் கட்டி ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறேன். இப்படி அறம் சார்ந்த வாழ்க்கை நடத்தி வரும் என்மீது அவதூறு வீசும் மு.க.ஸ்டாலின் இதுபோன்று ஏதேனும் ஒரு சேவை செய்ததாக சுட்டிக்காட்ட முடியுமா?
அவதூறு கூறி வரும் மு.க.ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன். என்மீது பொய்யாக விசாரணை கோரும் மு.க.ஸ்டாலினை அவர் தொடர்புடைய ஊழல் புகார்களை அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்துக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.
மு.க.ஸ்டாலினிடம் நான் 3 கேள்விகளை முன் வைக்கிறேன். சேகர் ரெட்டிக்கும் இவர்கள் குடும்பத்தினருக்கும் பணத்தொடர்பு உண்டா? இல்லையா? அவருடன் உங்களுக்கு நட்பு இருக்கிறதா? இல்லையா? சேகர் ரெட்டிக்கும் ரெட்ஜெயிண்ட் பட நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
2ஜி ஊழல் புகாரில் சிக்கிய ஸ்வான் நிறுவன அதிபர் ஷாகித் பால்வாவை நீங்கள் 2 முறை சந்தித்து கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி கொடுக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினீர்களா இல்லையா? பால்வாவுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுத்த சாதிக் பாட்ஷா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த சொல்வீர்களா?
ரூ.22 கோடி மதிப்புள்ள ஹம்மர் சொகுசு கார்கள் இறக்குமதியில் உங்கள் மகன் உதயநிதி மற்றும் மு.க.அழகிரி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக உங்கள் வீட்டிலும் மு.க.அழகிரி பண்ணை வீட்டிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியதா? இல்லையா? அந்த ஹம்மர் கார் உதயநிதியிடம் எப்படி வந்து சேர்ந்தது? இந்த 3 கேள்விகளுக்கும் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதில் சொல்ல வேண்டும்.
நான் முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன். வருமான வரித்துறை என்னிடம் சோதனை நடத்தி நான் முறைகேடாக பணம் சம்பாதித்திருக்கிறேன் என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால் பொதுவாழ்வில் இருந்து நான் வெளியேறுகிறேன். அதேபோல சேகர் ரெட்டிக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பணத்தொடர்பு உள்ளது என்பது உறுதியானால் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக மேடைபோட்டு விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன். எனது கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும். இனி அரசியல் பற்றி நான் பேசுவதற்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை.’ இவ்வாறு அந்த பேட்டியில் சைதை துரைசாமி தெரிவித்தார்.