வெளியானது ஷுஜாத் புகாரி படுகொலை குறித்த சிசிடிவி காட்சி..!
ரைஸிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் புகாரியின் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் சிசிடிவி படத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ரைஸிங் காஷ்மீர்’ பத்திரிகை அலுவலகம் ஸ்ரீநகரின் பிரஸ் என்கிளேவ் பகுதியில் உள்ளது. இந்த பத்திரிகையின் ஆசிரியரான ஷுஜாத் புகாரி, லால் சவுக் பகுதியில் மாலையில் நடைபெற இருந்த இப்தார் விருந்தில் பங்கேற்பதற்காக தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்படத் தயாரானார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சுட்டு விட்டு தப்பி ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் புகாரியும் அவரது தனி பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் மற்றொரு காவல் அதிகாரியும் பொதுமக்களில் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ட்விட்டரில் ஷுஜாத் புகாரி கொல்லப்பட்ட செய்தி கேட்டு வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். ரமலான் பண்டிகைக்கு முன் தீவிரவாதம் அதன் கோரமுகத்தை காட்டியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.
புகாரியின் வீட்டிற்கு சென்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ஷுஜாத் புகாரியின் இறுதி ஊர்வலம் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஷுஜாத் புகாரிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஷுஜாத் புகாரியின் நீண்ட நாள் நண்பரும் பத்திரிகையாளருமான முகமத் சையத் கூறும்போது, ‘‘அவர் ஒரு நல்ல மனிதர். அவர் இறந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட அவரது பத்திரிக்கையில் பத்தாம் ஆண்டு விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுத்தார். நானும் அதில் கலந்து கொண்டேன். ஆனால் அதுதான் அவருடனான கடைசி சந்திப்பு என்று எனக்கு தெரியாது” என்றார்.
தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குநர் முகமத் ரபாக் கூறும்போது, ”அவர் எனது இளைய சகோதரர் போன்றவர். அவர் சிறந்த எழுத்தாளர். காஷ்மீர் மக்களின் குரலாக இருந்தார். அவரது இறப்பு அவரது குடும்பத்துக்கு பெரும் இழப்பு” என்று கூறினார்.
இந்த நிலையில் ஷுஜாத் புகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் புகைப்படத்தை காஷ்மீர் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.