விமான இன்ஜின் 32,000 அடி உயரத்தில் வெடித்து சிதறியது !ஜன்னல் வழியாக தூக்கி எறியப்பட்ட பெண் பலி!
நடுவானில் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நியூயார்க் நகரிலிருந்து டல்லஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதன் இன்ஜின் வெடித்துச் சிதறியது. பறந்துவந்த இன்ஜின் பாகமொன்று ஜன்னல் கண்ணாடியை உடைத்து நொறுக்க ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்த பெண்மணி விமானத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட இருந்தார்.
முதலில் தலை வெளியே இழுக்கப்பட பிறகு இடுப்புப் பகுதி வரை விமானத்தின் ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் பயணிகள் அவரை தூக்கி எறியாமல் உள்ளே இழுத்துப் பிடித்துக் காப்பாற்றினாலும் இன்ஜின் பாகமான உலோகத்துண்டு அவரைத் தாக்கியது. தலையில் கடுமையான அடி காரணமாக அவர் பிறகு உயிரிழந்தது பயணிகளிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தப் பெண்மணியின் பெயர் ஜெனிபர் ரியோர்டன். இவர் வெல்ஸ் பார்கோ வங்கியின் மக்கள் தொடர்புத் துறையின் துணைத்தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் தவிர 7 பேர் காயமடைந்தனர்.
சுமார் 149 பயணிகள் பயணித்த இந்த விமானம் போயிங் 737 ரக இரட்டை இன்ஜின் விமானமாகும். விபத்துக்குப் பிறகு பிராணவாயு மாஸ்க்குகளுடன் பயணிகள் காப்பாற்றப்பட அவசரமாக பிலடல்பியாவில் விமானம் தரையிறக்கப்பட்டது.
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் பிலடெல்பியாவுக்கு குழு ஒன்றை அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் விசாரணை லேசுபட்டதல்ல என்று தெரிகிறது 12 முதல் 15 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இந்தக் களேபரத்திலும் பெண் விமானி மிகவும் நிதானமாக பதற்றமடையாமல் பயணிகளையும் பதற்றப்படுத்தாமல் செயல்பட்டது பலரது பாராட்டுகளையும் ஈர்த்துள்ளது.
இன்ஜின் வெடித்துச் சிதறி சப்தம் கேட்டு பயணிகள் மிரண்டு போய் பிரார்த்தனைகளில் இறங்கினர். ஒரு சில மனவலிமையுடையோர் மட்டும் ஒன்றும் இல்லை, பயப்பட வேண்டாம் என்று தைரியம் காட்டியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.