விண்ணில் செலுத்தப்படும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்..!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளை ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. பல்வேறு அறிவியல் மாநாட்டில் பங்கேற்று மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், கடந்த மார்ச் 14-ம் தேதி அதிகாலை தனது 76-வது வயதில் காலமானார். லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.
மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் உடலை அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சியாளராக இருந்த கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்திற்கு ஆறு சுமை தூக்குபவர்களால் எடுத்துச்செல்லப்பட்டது.
வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியிலுள்ள அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே ஹாக்கிங்கின் சாம்பல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 1727ஆம் ஆண்டு இறந்த சர் ஐசக் நியூட்டன் உடலும், அதற்குப் பின்னர் 1882ல் உயிரிழந்த சார்லஸ் டார்வின் உடலும் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹாக்கிங்கின் சாம்பலுக்கு மரியாதை செலுத்தும் அதே நேரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் குரல் அடங்கிய பாடல் விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது. பிளாக் ஹோல் குறித்து ஆராய்ச்சி செய்த ஹாக்கிங்கின் குரல் அங்கு ஒலிக்க வேண்டும் என அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
6 நிமிடங்கள் அடங்கிய இந்த பாடலின் இடையில் ஹாக்கிங்கின் குரல் உள்ளது. இது ஐரோப்பா விண்வெளி நிலையத்தில் இருந்து செபிரியாஸ் ஆண்டனா வழியாக பூமியிலிருந்து 3 ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிளாக் ஹோலிற்கு அனுப்பப்படுகிறது. இது மிகவும் பிரபலமான பிளாக் ஹோலாகும்.