வரும் காலம் ரோபோக்களின் கையிலா?
வரும் காலங்களில் உங்களுடைய வேலைகளையெல்லாம் ரோபோக்கள் தட்டிப் பறிக்கப் போகின்றன, உஷார் !’’ இப்படி ஒரு அறிவிப்பை சாதாரணமாய் யாராவது சொன்னால் உதறி விட்டுப் போய்விடலாம்.
ஆனால் பல லட்சம் மக்களுக்கு வேலை கொடுத்து, தொழில்நுட்ப உலகில் ஜாம்பவானாக இருக்கும் பில் கேட்ஸ் சொன்னால் கொஞ்சம் நின்று நிதானிக்க வேண்டியிருக்கிறது.இந்நிலையில் தொழில்நுட்ப உலகில் ‘ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை அறிவின் அதீத வளர்ச்சி ரோபோக்களை உற்பத்தி செய்து தள்ளப்போகிறது.
அவை மனித வேலைகளை வேகமாகவும், திறமையாகவும் செய்து குவிக்கப்போகின்றன. இதனால் மக்கள் வேலையிழக்கும் அபாயம் உண்டு என்பது தான் அவர் சொன்ன விஷயம், அது தான் யதார்த்தமும் கூட.அடுத்த பத்து ஆண்டுகளில் 80 கோடி பேர் வேலையிழப்பார்கள்.
அவர்களுடைய வேலையை திறமையாகவும் வேகமாகவும் ரோபோக்கள் செய்யும் எனும் ஒரு ஆய்வு முடிவை பிரபலமான மெக்கன்ஸி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதாவது 20 சதவீதம் மக்கள் வேலையிழக்கும் அபாயம் .
இந்நிலையில் நாற்பத்தாறு நாடுகளில் விரிவாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தான் இந்த முடிவைத் தந்தது. சர்வதேச அளவில் ரோபோக்களால் ஏற்படப் போகும் விளைவு இது என்பது கவனிக்கத்தக்கது.மேலும் ரோபோக்களெல்லாம் கைகளையும் கால்களையும் மடக்காமல், லெகோ பொம்மையைப் போல நடக்கும் காலம் மலையேறிவிட்டது.
எனவே மனிதனைப் போலவே தோற்றமுடையதாக இப்போது ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன. இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் கற்பனையாக உலவிய கதாபாத்திரங்கள் நிஜத்தில் சாத்தியமாகியிருக்கின்றன.இருக்கையில் சரிக்கு சமமாக அமர்ந்து டி.வி.யில் பேட்டி கொடுக்கிறது ‘சோபியா’ எனும் ரோபோ.
உலகிலேயே குடியுரிமை பெற்ற முதல் ரோபோ! எந்த கேள்வி கேட்டாலும் ‘பளிச்’ என பதில் சொல்கிறது. கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப முகபாவத்தை மாற்றிக் கொள்கிறது. நகைச்சுவை சொன்னால் சிரிக்கிறது. பேசுவது ரோபோவா, இல்லை மனிதனா எனும் சந்தேகமே வருமளவுக்கு நடந்து கொள்கிறது.
மேலும் ரோபோக்கள் கேமரா எடுத்தால் போஸ் கொடுக்கிறது!பேருந்தில் நமக்குப் பக்கத்தில் இருப்பது ரோபோவா, மனிதனா என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய சூழல் வரலாம்.