வடகொரிய அதிபருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சிங்கப்பூர்வாசிகள்..!
வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.
இதற்கிடையே, டிரம்ப் – கிம் சந்திப்பு சிங்கப்பூரில் 12-ம் தேதி நடைபெறும் என்றும், இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இதையடுத்து, டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே சிங்கப்பூர் வந்தடைந்தனர். இருவரது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என சிங்கப்பூர் அரசும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூர் வந்திருந்த வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அங்குள்ள முக்கிய சுற்றுலா தளங்களை இரவில் சுற்றிப் பார்த்தார்.
மெரினா பே என்ற பகுதிக்கு வந்திருந்த கிம் ஜாங் உன்னை பொதுமக்கள் ஆர்வமுடன் அவரை சந்தித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் இஸ்பலாண்டே என்ற பகுதிக்கு சென்ற கிம் ஜாங்கை அதிகாரிகள் வரவேற்றதுடன் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கிம் ஜாங் அன்னுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.