வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரஷியா..!

Default Image
உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்தது. மேலும், ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையிலும் முழுமையான வெற்றி பெற்றதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது.
இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் அடங்கிய தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றியது.
வடகொரியாவின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) மற்றும் கடல் உணவுகள் ஏற்றுமதி என வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தாக்கல் செய்து, ரஷியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது.
இதைத்தொடர்ந்து, தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிங்கப்பூரில் இரு தினங்களுக்கு முன்னர், அந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பும் நடந்து முடிந்தது.
கிம் ஜாங் அன் உடனான சந்திப்பின் போது, நான் பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால், அணு ஆயுதங்களை முற்றிலுமாக வடகொரியா அழித்த பின்னரே தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். எனவே, தற்போதைக்கு இந்த தடைகள் தொடரும் என டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து ஐ.நா.சபைக்கான ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா பேசுகையில், “எதிரும் புதிருமாக இருந்த இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்துள்ளது. இதை ஊக்கப்படுத்தும் விதமாக அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்கும் விவகாரத்தில் ரஷியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்தில் சிங்கப்பூர் சந்திப்பின்போது ஏற்பட்ட ஒப்பந்தம் மற்றும் வட கொரியா மீதான பொருளாதார தடை நீக்கம் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்