வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்!
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பில் வடகொரிய அதிபர் கிம்முடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரியாவில் இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை இனி இரவில் நிம்மதியாக தூங்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவையில் வடகொரியா அணு ஆயுத ஒழிப்பை ஏற்கனவே தொடக்கி விட்டதாகவும் அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அனுப்பியுள்ள பிரகடனத்தில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களில் பயன்படுத்த தக்க அணுசக்தி இருப்பும் வட கொரியா அரசின் கொள்கைகளும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும்,பொருளாதாரத்திற்கும்,வெளியுறவு கொள்கைக்கும் அசாதாரண அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.