வங்காள தேசத்தில் வன்முறையாக மாறிய உலகக் கோப்பை கால்பந்து ஜூரம்..!
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் உலகக் கோப்பையை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி, போர்ச்சுக்கல் அணி கேப்டன கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசில் அணி கேப்டன் நெய்மர் ஆகியோருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது தாங்கள் வசிக்கும் தெருக்களில் தங்களுடைய பிடித்த வீரர்கள் விளையாடும் அணிகளின் கொடியுடன் ரசிகர்கள் உலா வருகின்றனர்.
கொல்கத்தாவில் மெஸ்சியின் தீவிர ரசிகரான டீக்கடை உரிமையாளர் ஒருவர் தனது மூன்று மாடி வீட்டிற்கு அர்ஜென்டினா ஜெர்சியின் கலரை வண்ணமாக அடித்திருந்தார்.
உலகக் கோப்பை கால்பந்து ஜூரம் வங்காள தேசத்தையும் விட்டுவைக்கவில்லை. சுமார் 16 கோடி மக்கள் தொகை கொண்ட வங்காள தேசம், உலகக் கோப்பை பிபா தரவரிசையில் 211 அணிகளில் 194-வது இடத்தில் உள்ளது. என்றாலும் கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர்.
கடந்த வாரம் முக்கிய நகரான பந்தரில் மெஸ்சி, நெய்மர் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது மகன் படுகாயம் அடைந்தார். சாலையில் கொடியை ஏந்திச் செல்லும்போது 12 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.