ரூ 20,00,00,000 வேண்டும்..பேடிஎம் உரிமையாளருக்கு வந்த சோதனை…..!!
பேடிஎம் உரிமையாளரை மிரட்டி ரூ. 20 கோடி கேட்டு மிரட்டல்: பெண் ஊழியர் உள்ளிட்டோர் கைது
பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மாவின் தனிப்பட்ட தகவல்களை திருடி, 20 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததாக, அவரது தனிச் செயலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல இ-வாலட் நிறுவனமான பேடிஎம் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பிறகு பெரிய அளவில் பிரபலமடைந்தது. நிதி பரிவர்த்தனை வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தை உருவாக்கிய விஜய் சேகர் சர்மா தற்போது அதன் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். டெல்லி அருகே நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பேடிஎம் நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அதில் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மாவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றி வருபவர் சோனியா தவன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக விஜய் சேகர் சர்மாவின் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர் தேவேந்திர குமார். இவர்கள் இருவரும் பேடிஎம் நிறுவனம் பெரிய அளவில் வளர்வதற்கு உழைத்த ஊழியர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.இந்தநிலையில், சோனியா தவன் அவரது கணவர் ரூபக் ஜெயின், தேவேந்திர குமார் ஆகியோர், பேடிஎம் சிஇஓ சர்மாவின் தனிப்பட்ட தகவல்களை திருடி வைத்துக்கொண்டு, அவரை பிளாக்மெயில் செய்ததாக கூறி போலீஸார் கைது செய்துள்ளனர்.விஜய் சேகர் சர்மாவின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டால், நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும், நற்பெயர் கெட்டுப்போகும் என்று கூறி அவர்கள் மிரட்டியதாகவும், இதற்காக 20 கோடி ரூபாய் தர வேண்டும் என்று அவர் மிரட்டியதாக நொய்டா போலீசில் விஜய் சேகர் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.