ரூ 100,00,00,000 டாலர் தேவை : "2 ஆயிரம் பேர் மரணம் , 5 ஆயிரம் பேர் காணவில்லை"
இந்தோனேசியா நாட்டை சமீபத்தில் உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு 100 கோடி டாலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. இதனால் அந்நகரம் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.
இந்த இயற்கை சீற்றத்துக்கு சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். சுமார் 5 ஆயிரம் பேர் காணாமல் போனதாக தெரிகிறது. இதுதவிர, பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து உள்நாட்டிலேயே அகதிகள்போல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி உயரதிகாரிகள் இங்கு வந்து சுலாவேசி, லோம்போக் மற்றும் பலு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அங்கு ஏற்பட்ட இழப்புகளை மதிப்பீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதேபோல், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், நிலநடுக்கம், சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான புணர்வாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளுக்காக 100 கோடி டாலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி இன்று அறிவித்துள்ளது.
இந்த தொகையை கொண்டு பேரழிவால் மிகவும் பாதிக்கப்பட்டு, வாழாதரங்களை இழந்து வாடும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பண இழப்பீடு அளிக்கப்படும் என தெரிகிறது.