ரஷிய உலக கோப்பை கால்பந்து: சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளே…!

Default Image

21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. கால்பந்து ஜுரத்தால் ஒட்டுமொத்த ரஷியாவும் களைகட்டியுள்ளது. பங்கேற்கும் 32 அணிகளும் இறுதிகட்ட ஆயத்தபணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

நாளைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியாவும், சவூதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த உலக கோப்பையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வருமாறு:-

* உலக கோப்பை நடக்கும் ரஷியாவின் நகரங்கள் ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் இரு கண்டங்களில் நடக்கும் முதல் உலக கோப்பை இது தான்.

* போட்டிக்கு தேர்வாகியுள்ள 11 நகரங்களில் எகடெரின்பர்க், கலினிங்கிராட் இடையிலான தூரம் மட்டும் 2,424 கிலோமீட்டர் ஆகும். மாஸ்கோவில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு செல்லக்கூடிய தூரமும் இது தான்.

* உலக கால்பந்து திருவிழாவை நேரில் பார்த்து மெய்சிலிர்க்க பல்வேறு நாடுகளில் இருந்து ஏறக்குறைய 10 லட்சம் பேர் ரஷியாவுக்கு படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் ரசிகர்களையும் சேர்த்து போட்டியை நேரில் காணும் ரசிகர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

* மொத்தம் நடக்கும் 64 ஆட்டங்களை நேரிலும், டி.வி., இணையதளம் வாயிலாகவும் உலகம் முழுவதும் 300 கோடி பேர் பார்ப்பார்கள் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

* உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் ரஷியா (தரவரிசை 70)- சவூதிஅரேபியா (67) அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் தரவரிசையில் மிகவும் பின்தங்கிய அணிகள் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

* உலக கோப்பையை ஒவ்வொரு அணி வெல்லும் போதும் அந்த அணியின் பயிற்சியாளராக அந்த நாட்டைச் சேர்ந்தவர்களே இருந்துள்ளனர். இந்த உலக கோப்பையில் அது மாறுமா? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

* ரஷியாவில், கால்பந்து போட்டிகளின் போது ரசிகர்கள் இனவெறியுடன் சீண்டும் சம்பவம் அடிக்கடி நடந்துள்ளது. இனவெறி சர்ச்சைக்கு துளியும் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) இதை கண்காணிக்க ஒவ்வொரு போட்டியின் போது 3 பார்வையாளர்களை நியமித்துள்ளது. இனவெறி பிரச்சினை அளவுக்கு மீறி போனால் ஆட்டத்தை நிறுத்தவோ அல்லது ரத்து செய்யவோ போட்டி நடுவருக்கு அதிகாரம் உண்டு.

* இந்த உலக கோப்பையில் முதல் முறையாக ‘வி.ஏ.ஆர்.’ எனப்படும் வீடியோ உதவி நடுவர்கள் முறை அமல்படுத்தப்படுகிறது. பிரத்யேக அறையில் அமர்ந்து கண்காணிக்கும் இந்த உதவி நடுவர்கள், ஒவ்வொரு போட்டி நடைபெறும் போது, அதன் வீடியோ பதிவுகளை ஒரு நொடி கூட விடாமல் தொடர்ந்து பார்ப்பார்கள். களத்தில் நடுவர் ஆட்சேபனைக்குரிய முடிவு வழங்கினாலோ அல்லது தவறுகளை கவனிக்க தவறினாலோ அதை கள நடுவருக்கு தொழில்நுட்ப உதவியுடன் உடனடியாக சுட்டிக்காட்டுவார்கள். அவர் அதை ஆய்வு செய்து, சரியான முடிவை வழங்குவார். இதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க முடியும்.

* உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ.1,300-ல் இருந்து ரூ.71 ஆயிரம் வரையிலான விலைகளில் விற்கப்படுகிறது. 25 லட்சத்திற்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுள்ளன. டிக்கெட்டுகளை வாங்கியதில் போட்டியை நடத்தும் ரஷியா முதலிடம் வகிக்கிறது. அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இதுவரை 8 லட்சத்து 72 ஆயிரம் டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர். இந்திய ரசிகர்களுக்காக 17,962 டிக்கெட்டுகளை ‘பிபா’ ஒதுக்கியுள்ளது.

* இந்த உலக கோப்பை மொத்தம் 11 நகரங்களில் உள்ள 12 ஸ்டேடியங்களில் அரங்கேறுகிறது. தொடக்க மற்றும் இறுதிப்போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெறும். இது 81 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது.

* கவுரவமிக்க இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்காக ரஷிய அரசாங்கம் ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.

* எகிப்து கோல் கீப்பர் எஸ்சாம் ஐ ஹதாரியின் வயது 45 ஆண்டு 4 மாதங்கள் ஆகும். இந்த உலக கோப்பையில் அவர் எகிப்து அணியில் களம் இறக்கப்பட்டால், உலக கோப்பையில் விளையாடிய மூத்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

* ஆஸ்திரேலிய நடுகள வீரர் டேனியல் அர்ஜானி (19 ஆண்டு 5 பந்து) இந்த உலக கோப்பையின் இளம் வீரராக வலம் வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்