ரம்ஜான் ஸ்பெஷல்: சிறப்பு இனிப்பு வகை உணவுகள்..! உங்களுக்காக….!

Default Image

இனிப்பு’ சொல்லும்போதே நாவிலும், செவியிலும் சுவையூறும் இந்த தின்பண்டத்துக்கு குழந்தைகள் முதல் முதுமக்கள் வரை அடிமையாகி விடுவதுண்டு. ஒவ்வொரு நாட்டிலும் சில இனிப்பு வகைகள் பாரம்பரிய பிரசித்தியுடன் மக்களின் உள்ளம் கவர்ந்த பலகாரமாக திகழ்ந்து வருகிறது.

நம்நாட்டு ஜாங்கிரி, மைசூர்பாவைப் போல் அரபு நாடுகள் மற்றும் எகிப்தில் சில பிரத்யேக இனிப்பு வகைகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக உள்ளன. விசேஷ நாட்களில், குறிப்பாக, ரமலான் நோன்பு மற்றும் ரம்ஜான் பண்டிகையின்போது அராபிய வீடுகளில் தயாரிக்கப்படும் சில சிறப்பு வகைகளை ‘மாலைமலர் டாட்காம்’ உங்களுக்கு இங்கே அறிமுகப்படுத்துகிறது.

1.கட்டாயெஃப் (Qattayef) :

கோதுமை மாவால் பணியாரம் போல் மடிக்கப்பட்டு, எண்ணெயில் பொரித்து, உள்பகுதியில் பூரணமாக பாலாடை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட உலர் பருப்பு வகைகள் மற்றும் ஆப்பிள் துண்டங்களால் நிரப்படும் இந்த இனிப்பை சர்க்கரை ஜீராவில் ஊறவைத்தும் பரிமாறலாம். அரைவட்ட நிலவின் வடிவில் காணப்படும் இந்த கட்டாயெஃப் எகிப்தியர்களின் மனம்கவர்ந்த முக்கிய பலகாரங்களில் ஒன்றாகும்.

2. குனாஃபா (Kunafa) :

நம்மூர் பால்கோவாவைப் போல் காட்சியளிக்கும் இந்த இனிப்பும் பாலின் கிரீமுடன் கோதுமை மாவை கலந்து வெண்ணெயில் வேக வைத்து தயாரிக்கப்படுகிறது. உலர் பருப்பு வகைகள் நிறைந்த இந்த இனிப்பு ‘கின்னஸ்’ புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு பாலஸ்தீன நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரேதட்டில் 1,765 கிலோ எடை கொண்ட குனாஃபாவை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது, குறிப்பிடத்தக்கது.

3. லுகைமட் (Luqaimat) :

நம்மூர் ’சுசியம்’ உருண்டையைப்போல் கோதுமை மாவால் தயாரிக்கப்படும் இந்த இனிப்பு வெளிப்புறத்தில் மொறுமொறுப்பாகவும், உள்பக்கத்தில் மிருதுவாகவும் சற்று பசைவாட்டமாகவும் இருக்கும். தேனில் ஊறவைத்து சாப்பிடும் இந்த லுகைமட் உருண்டைகளுக்கு மனதை பறிகொடுக்காத அராபியர்களே இல்லை. அரபு நாடுகளில் ‘லுக்மட் அல்-காதி’ என்ற பெயரால் இது அழைக்கப்படுகிறது.

4. பஸ்பவ்ஸ்ஸா (Basboussa) :

’செமோலினா ஹல்வா’, ’லவ் கேக்’, ’ஹரிஸ்ஸா’, ‘நம்மவ்ர்ரா’ என்றெல்லாம் மத்திய கிழக்கு நாடுகளில் ஊருக்கு ஒருவிதமாக அழைக்கப்படும் இந்த பஸ்பவ்ஸ்ஸா, நம்நாட்டின் சேமியா கேசரியைப் போன்றது.

சுத்தமான கோதுமை ரவையுடன் சர்க்கரையை சேர்த்து அவித்து, ஆரஞ்ச், லெமன், தேங்காய், சாக்லேட் எசன்ஸ் சேர்த்து உலர் பருப்பு வகைகளால் அலங்கரிக்கப்படும் இந்த இனிப்பு பார்த்தாலே எச்சில் ஊறவைக்கும் வகையை சேர்ந்தது.

5. ஃபலூடே (Faloodeh) :

நம்மூர் பலூடாவைப் போன்ற இனிப்பு பானமான ஃபலூடே, சுண்டக்காய்ச்சிய பாலில் சர்க்கரை சேர்த்து, அரிசி சேமியா, சப்ஜா விதை, ஜெல்லி மற்றும் மரவள்ளி கிழங்கின் அவித்த துண்டங்களுடன் ரோஸ் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து குளிர்ச்சியாக பரிமாறப்படுகிறது. குறிப்பாக, அராபியர்கள் வீடுகளில் நடக்கும் ‘இப்தார்’ விருந்துகளில் இந்த ஃபலூடே தவறாமல் இடம்பெறும்.

6. பக்லாவா (Baklava) :

’பப்ஸ்’ வகையைப்போல் கோதுமை அப்பளத்தின் பல மெல்லிய மடிப்புகளாக உருவாக்கி, உள்ளே பூரணமாக வேர்க்கடலை நிரப்பி பொரித்து, தேனில் ஊறவைத்து பரிமாறப்படும் இந்த பக்லாவா 15-ம் நூற்றாண்டில் இருந்தே துருக்கி நாட்டு மக்களின் மிகப்பிரபலமான இனிப்பு வகையாக அறியப்படுகிறது.

7. உம்ம் அலி (Umm Ali) :

உலர்வகை பலகாரமான உம்ம் அலி என்ற இந்த இனிப்பு அராபியர்களின் முக்கிய உணவான கோதுமை ரொட்டி மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது என்பதால் இதற்கு ‘அலியின் அன்னை’ என்ற அடைமொழி பெயரும் உண்டு.

கோதுமை அடையை கரகரப்பாக பொரித்து, மடித்து உள்ளே பாலாடை கிரீம், உலர் பழங்கள் மற்றும் உலர் பருப்பு வகைகள் நிரப்பப்பட்டு ஏலக்காய் பொடிதூவி பரிமாறப்படும் இந்த உம்ம் அலி எகிப்தியர்களின் மாலைநேர நொறுக்குத்தீனி வகையைச் சேர்ந்ததாகும்.

8. செபாக்கியா (Chebakia) :

மொராக்கோ நாட்டின் பூர்விக இனிப்பு வகையான செபாக்கியா, நம்மூர் பாதுஷாவைப் போல் மிருதுவாக இருக்கும். கோதுமை பூரியை திரட்டி, அதை பூப்போன்ற வடிவங்களில் மடித்து, லேசாக பொரித்து, தேனில் ஊறவைத்து, மேற்புறத்தில் வெள்ளை எள்ளால் அலங்கரிக்கப்படும் இந்த பலகாரத்தை காரமான தக்காளி மற்றும் பயிறுவகை சூப்களுடன் சேர்த்து சாப்பிடுவதை அராபியர்கள் மிகவும் விரும்புகின்றனர்.

9. பஹ்ரைனி ஹல்வா (Bahraini Halwa) :

பஹ்ரைன்வாசிகளின் முக்கிய இனிப்பு வகையான இந்த அல்வா, ஜெல்லியைப்போல் கொழகொழப்பாக இருக்கும். சோளமாவுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்கவைத்து இழுவைப்பதமாக(கம்பி பதம்) வெந்தபிறகு, குங்குமப்பூ மற்றும் உலர் பருப்பு வகைகள் சேர்த்து பரிமாறப்படும் இந்த இனிப்பை அராபியர்கள் ‘ஹல்வா ஷோவைட்டர்’ என்றும் அழைப்பதுண்டு.

10. மஃப்ரோவ்கே (Mafroukeh) :

ரம்ஜான் காலத்து முக்கிய இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்றாகும். லெபனானில் இருந்து பிரபலமான இந்த இனிப்புவகை கோதுமை ரவை, சர்க்கரை மற்றும் வெண்ணெய் கலந்து தயாரிக்கப்படுகிறது. அடுப்பிலிட்டு நம்மூர் உளுத்தங்களியைப்போல் அடிபிடிக்காமல், கைவிடாமல் கிளறி இறக்கி, பன்னீர் மற்றும் ஆரஞ்சு எசன்ஸ் சேர்த்து, பால் கிரீம் மற்றும் உலர் பருப்புகளால் அலங்கரிக்கப்படும் மஃப்ரோவ்கே-வும் அராபிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு உணவுகளில் ஒன்றாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)